ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து வெடித்து மாணவி பலியான விவகாரத்தில் உருக்கமான தகவல்


ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து வெடித்து மாணவி பலியான விவகாரத்தில் உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 16 March 2022 12:08 AM IST (Updated: 16 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்து மாணவி இறந்த சம்பவத்தில் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்து மாணவி இறந்த சம்பவத்தில் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டில் வெடி மருந்து
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆறுதெங்கன்விளையை சேர்ந்தவர் பாக்கிய ராஜன் என்கிற ராஜன் (வயது40), தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு தேன்மொழி (13), வர்ஷா (10) என்ற 2 மகள்கள் இருந்தனர். அவர்கள் ஆலங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  தேன்மொழி 8-ம் வகுப்பும், வர்ஷா 5-ம் வகுப்பும் படித்தனர். 
 ராஜன் அனுமதியின்றி வீட்டில் வைத்து அவ்வப்போது பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கான வெடி மருந்தை வீட்டின் முன்பு ஒரு சிறிய அறையில் சாக்கு பையில் வைத்திருந்தார். அந்த அறையில் முயல் குட்டிகள் வளர்த்து வந்தனர். 
நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக பார்வதியும், அவரது மகள்களும் புறப்பட தயார் ஆனார்கள். அப்போது சிறுமி வர்ஷா முயலுக்கு உணவு கொடுக்க அந்த அறைக்கு சென்றாள்.
சிறுமி பலி
வர்ஷா உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறி அந்த அறை இடிந்து தரை மட்டமானது. இதில் வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும், வெடிமருந்து வெடித்து சிதறியதில் ஒரு கல் வந்து விழுந்ததில் பார்வதி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்தது.
2 பேரிடம் விசாரணை
அந்த பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்கிற பெண் ஓலை பட்டாசு செய்வதற்காக அனுமதி பெற்று கடந்த 2012 -ம் ஆண்டு வரை பட்டாசு செய்து விற்பனை செய்து வந்துள்ளார். அதன்பின்பு அந்த உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்துள்ளார். 
இவர் தான் ராஜனுக்கு வெடிமருந்தை கொடுத்து பட்டாசு செய்து கேட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக அந்தப் பெண்ணையும், ராஜனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story