வடபாதி வடிகால் வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா
கூத்தாநல்லூர் அருகே வடபாதி வடிகால் வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே வடபாதி வடிகால் வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வாகன போக்குவரத்து
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் மூலங்குடி வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலையை பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அச்சம்
இந்த சாலையில் வடபாதி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட வடபாதி வடிகால் வாய்க்கால் பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பழுதடைந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகிறார்கள். பழுதடைந்த பாலத்தின் மையத்தில் சாலை உள் வாங்கி இருப்பதால் அந்த இடத்தில் பள்ளமாக உள்ளது.
மேலும் பாலத்தின் தடுப்பு சுவர் மற்றும் தரை தளம் அச்சுறுத்தும் வகையில் உள்ளதால், பகல் நேரம் மட்டுமின்றி, இரவு நேரங்களில் வருவோரும் அதிகளவில் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள்.
எனவே பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த வடிகால் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் அல்லது பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக வடிகால் வாய்க்கால் பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story