1,400 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கடலூரில் உள்ள பொரிப்பகத்தில் இருந்து 1,400 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
கடலூர்,
கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி என்று அழைக்கப்படும் ஆமைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த வகை ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதங்களில் இனப்பெருக்கத்தை தொடங்கும். இதற்காக கடலில் இருந்து வெளியே வரும் போது, இழுவை கப்பல்களில் சிக்கி உயிரிழக்கும். இது தவிர பிளாஸ்டிக்கை ஜெல்லி மீன்கள் என்று உண்ணும் போதும் உயிரிழந்து விடுகிறது.
ஆமை முட்டைகளை காகம், நாய்கள் சாப்பிட்டு வீணாக்கி வந்தது. இத்தகைய ஆமைகளை பாதுகாக்க கடலூர் மாவட்ட வனத்துறை ஆண்டுதோறும் அதன் முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொறிக்க வைத்து மீண்டும் கடலில் விட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு மாவட்ட வனத் துறை மூலம் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வன காப்பாளர் ரமேஷ் மற்றும் வன ஆர்வலர் செல்லா, தன்னார்வலர்கள் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
அதன்படி அவர்கள் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகளை சேகரித்தனர். அதை தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏற்பாடு செய்த குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். அந்த பொரிப்பகத்தில் ஆமை குஞ்சுகள் வெளி வர தொடங்கின. இதையடுத்து அந்த ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் உதவியுடன் செல்லா மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர் கடலில் விட்டு வருகின்றனர்.
நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் காலையில் 900 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர். மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 500 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், வனத்துறையினர், வன ஆர்வலர் செல்லா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குஞ்சு பொறிக்க ஆமை குஞ்சுகள் கடலில் விடப்படும் என்று வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story