இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
நெல்லையை அடுத்த சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நல்லசிவம் மகள் நந்தபிரியா (வயது 20). இவருக்கும், மருதமுத்தூர் புதுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. ஆறுமுகம் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் நந்தபிரியா பெற்றோர் வீட்டின் மாடிப் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஆறுமுகம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட நந்தபிரியா அவரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் கூறி விட்டு போன் இணைப்பினை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் நந்தபிரியா செல்போனை மீண்டும் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடிய வில்லை.
தூக்கில் தொங்கினார்
இதனையடுத்து நந்தபிரியாவின் தந்தை நல்லசிவத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வேலை காரணமாக வெளியே சென்று விட்டதால் அவர்களது உறவினரிடம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்த போது காங்கீரிட் கூரையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கொக்கியில் சேலையால் நந்தபிரியா தூக்குமாட்டி தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், நந்தபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கரெட் திரேசா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் வழக்குப்பதிவு செய்தார். திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story