சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 16 March 2022 1:27 AM IST (Updated: 16 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திபெருமானுக்கு 16 வகையாக அபிஷேகம், ஆராதனை நடந்தது.உடையார்பாளையத்தில் காமூண்டீஸ்வரர் கோவிலில் நந்திபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பயறணீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Next Story