வழிதவறிய மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
வழிதவறிய மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் கண்டக்டர் ஒருவர், வாய் பேச முடியாத, காது கேளாத மூதாட்டி ஒருவரை அழைத்து வந்து, வழிதெரியாமல் பஸ் ஏறி விட்டதாக ஒப்படைத்துச் சென்றார். இதையடுத்து மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்த போலீசாருக்கு, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் முருகன், மூதாட்டியிடம் சைகை மூலம் அவர் குறித்து கேட்டார். அதனை புரிந்து கொண்ட மூதாட்டி, தன்னிடம் இருந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார். இதையடுத்து அவரது பெயர் இளஞ்சியம் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது முகவரி, தொடர்பு எண் எதுவும் அந்த அடையாள அட்டையில் இல்லை. இது பற்றி தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், அடையாள அட்டை எண்ணை கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மையத்தில் தகவல்களை கேட்டார். இதையடுத்து அவருக்கு அந்த மூதாட்டி குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விசாரித்தபோது அந்த மூதாட்டி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த எடமேலையூரை சேர்ந்தவர் என்பதும், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு உறவினர்களுடன் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உத்தரகுடி கிராமத்திற்கு வந்ததும், வழியில் கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறியபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் ஏற முடியாமல் கீழே விழுந்ததும், பின்னர் ஜெயங்கொண்டம் வந்த மற்றொரு பஸ்சில் ஏறியநிலையில், அவரால் வாய் பேச முடியாததால் சரியான இடத்தை கூறி இறங்க தெரியாமல் தவித்ததும், இதையடுத்து அவரை கண்டக்டர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததும், இதற்கிடையே அவரை காணாமல் உறவினர்கள் அவரை தேடியதும், போலீசாருக்கு தெரியவந்தது. இது பற்றி அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த இளஞ்சியம் கண்ணீர் மல்க சைகையால் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் உத்தரகுடி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் அங்கு வந்து, அந்த மூதாட்டியை அழைத்துச் சென்றார்.
Related Tags :
Next Story