மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெகநாதன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களை டாக்டர்கள் பரிசோதித்து உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். இதில் நடைபயிற்சி சாதனம் ஒரு குழந்தைக்கும், கண் கண்ணாடி 6 குழந்தைகளுக்கும், சக்கர நாற்காலி ஒரு குழந்தைக்கும், சிறப்பு சக்கர நாற்காலி ஒரு குழந்தைக்கும், செவித்துணைக் கருவி 7 குழந்தைகளுக்கும், மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணம் 2 குழந்தைகளுக்கும் என மொத்தம் 18 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களுக்காகவும், அறுவை சிகிச்சைக்காக 5 குழந்தைகளும் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் 16 நபர்களுக்கு புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய 56 குழந்தைகளும், உடல் இயக்க குறைபாடுடைய 41 குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய 32 குழந்தைகளும், பார்வை குறைபாடுடைய 20 குழந்தைகளும் என மொத்தம் 149 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் வட்டார வள மைய உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாவூத் அலி, வட்டார கல்வி அலுவலர் சாந்தப்பன், கல்வி அலுவலர்(பொறுப்பு) அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story