மீன்களுக்காக விரிக்கப்பட்ட வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் பரபரப்பு
மீன்களுக்காக விரிக்கப்பட்ட வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் கிராமத்தில் இருந்து கீழப்புலியூர் கிராமத்திற்கு நீரோடை செல்கிறது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஓடையில் தண்ணீர் செல்கிறது. மேலும் தேங்கியுள்ள நீரில் மீன்கள் வளர்ந்து உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தூண்டில் போட்டும், வலைவிரித்தும் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் பெருமாள் கோவில் வடக்கு பகுதியில் உள்ள ஓடையில் நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்து கட்டி விட்டு வந்துள்ளனர். நேற்று காலை வலையில் சிக்கிய மீன்களை சேகரிப்பதற்காக சென்றனர். ஆனால் வலையில் மீன் இல்லாமல், மலைப்பாம்பு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடனடியாக அப்பகுதி மக்கள் இது பற்றி வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் இன்பரசன் (பொறுப்பு) தலைமையில் வன அலுவலர் சவுந்தர்யா முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கரிகாலன், ராஜா முத்துகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை வலையை வெட்டி மீட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பின் நீளம் 7 அடி என்றும், 20 கிலோ எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மலைப்பாம்பை சித்தளி காப்பு காட்டில் விட்டனர். இதற்கு முன்பு வாலிகண்டபுரம், பெருமத்தூர், பெண்ணகோணம் ஆகிய பகுதிகளில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனகாப்பு காட்டில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story