இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 16 March 2022 1:39 AM IST (Updated: 16 March 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருமயம்
 திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 7-ந் தேதி காப்பு கட்டப்பட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று பொங்கல் வைத்தல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருமயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டியும் ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர்.
தேரோட்டம்
 அதனைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மாரியம்மனுக்கு கரகம் எடுக்கப்பட்டு குடத்தின் விளிம்பில் கூரிய கத்தியை நிறுத்தி சக்தியை வழிபட்டனர். அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரி அம்மனை தேரில் அமர்த்தி மேளதாளம் முழங்க பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளை சுற்றிவந்து நிலையை அடைந்தது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், கிராமமக்களும் இணைந்து செய்திருந்தனர். பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story