குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம்; அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு


குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம்; அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2022 2:10 AM IST (Updated: 16 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

கடத்தூர்
குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோபியை அடுத்த கொடிவேரியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூய்மை இயக்கம் தொடக்க விழா, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் தலைமை தாங்கினார். அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மை பனியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
20 ஆண்டுகள்
இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்குவதில் பல பிரச்சினைகள் இருந்து வந்தது. இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன் பயனாளிகள் சுலபமாக வீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் வீடுகள் பெற ஒட்டு மொத்தமாக பணம் கட்ட வேண்டி இருந்தது. ஆனால் தற்போது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை 20 ஆண்டுகாலம் பிரித்து கட்டிக் கொள்ளலாம் என்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் விரைவாக பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும். எதிர்காலத்திலும் இந்த முறை நடைமுறைபடுத்தப்படும். 
விற்பனை பத்திரம்
குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதில் பல பிரச்சினைகள் உள்ளது. இதில் நேரடியாக பத்திரத்தை பெறக்கூடிய தகுதி படைத்தவர்களுக்கு உடனடியாக பத்திரத்தை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பணம் கட்டாமல் இருப்பவர்கள் பணத்தை செலுத்தினால் உடனே விற்பனை பத்திரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சில நபர்கள் பாதி தொகையை கட்டிவிட்டு மீதி தொகையை வேறு நபர்களுக்கு மாற்றி விடுகின்றனர். இதனால் யாருக்கு பத்திரத்தை கொடுப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே பணம் கட்டிய ஆதாரங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
விழாவில் மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் சிவசேனாதிபதி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவபாலன், கோபி ஒன்றிய செயலாளர் முருகன், கொங்கர்பாளையம் ஊராட்சி செயலாளர் சண்முகம், பெரியகொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன்சிவா, வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story