3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை


3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
x
தினத்தந்தி 16 March 2022 2:10 AM IST (Updated: 16 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ரெயில்வே கோட்டம் நடப்பாண்டில் 3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

சூரமங்கலம்:-
சேலம் ரெயில்வே கோட்டம் நடப்பாண்டில் 3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
சரக்கு போக்குவரத்து
இந்திய ரெயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது, குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை கொண்டு செல்வதில் அதிகளவு மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் ரெயில்கள் மூலம் அனைத்து வகையான சரக்குகளும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட போது பொதுமக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ரெயில்வே சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகித்தது.
3 மில்லியன் டன்
சென்னை, சேலம், திருச்சி ஆகிய 3 ரெயில்வே கோட்டங்கள் அதிகமாக சரக்குகளை கையாண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சரக்கு கையாள்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் இந்த கோட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நடப்பாண்டில் (2021-2022) சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் புதிய சாதனையாக 3 மில்லியன் டன் சரக்கை கையாண்டு சாதனை படைத்துள்ளது. அதாவது கடந்த 12-ந் தேதி அன்று இந்த சாதனையை சேலம் ரெயில்வே கோட்டம் படைத்தது.
சிமெண்டு, இரும்பு, பெட்ரோல் மற்றும் டீசல் உள்பட பல்வேறு பொருட்கள் ரெயில்களில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் இருந்து 47 ஆயிரம் டன் இரும்புகள் வெளியூர்களுக்கு சரக்கு ெரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பாராட்டு
சேலம் ரெயில்வே கோட்டம் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது, இதன் முதல் நிதி ஆண்டான 2008-2009-ல் 1.76 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. தற்போது 3 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது, இந்த சாதனை படைத்த சேலம் ரெயில்வே கோட்ட வணிக பிரிவு அதிகாரிகளுக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்,
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story