நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் சாவு


நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் சாவு
x
தினத்தந்தி 16 March 2022 2:11 AM IST (Updated: 16 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சேலம்:-
போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தீக்குளிப்பு
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 25), சரக்கு வாகன டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி இரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே தனது சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தோஷ் மதுபோதையில் இருந்ததாக கூறி அவருடைய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு மீண்டும் அதே இடத்துக்கு சென்றார். இதையடுத்து நடுரோட்டில் சந்தோஷ் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில் உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே அவர் தீக்குளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story