1 லட்சத்து 54 ஆயிரம் பேர், மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெறுகின்றனர்
மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேர், மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெறுகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேர், மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெறுகின்றனர்.
காமராஜர் திட்டம்
தமிழகத்தில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து சம்பாதிக்க முடியாமல் உணவுக்காக கஷ்டப்படும் முதியவர்களுக்காக, கடந்த 1962-ம் ஆண்டு முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அப்போது இந்த திட்டத்தின் மூலம் ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதம்தோறும் ரூ.20 வழங்கப்பட்டது. அதன்பின் இந்த தொகை ரூ.25, ரூ.35, ரூ.50, ரூ.75, ரூ.100, ரூ.150, ரூ.200 என அதிகரிக்கப்பட்டு தற்போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டம் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் என விரிவாக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
இ-சேவை மையம்
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 246 பேர் மாதம்தோறும் ஓய்வூதியம் பெறுகின்றனர். அதில் பொது பிரிவினர் 1 லட்சத்து 42 ஆயிரத்து 468-ம், ஆதிதிராவிடர்கள் 11 ஆயிரத்து 778 பேர் ஆவார்கள். மதுரை மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்தில் ஒருவர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தால், அந்த மனுவை 15 நாட்களுக்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற அரசின் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்யலாம். மேலும் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு தரலாம். கடந்த 9 மாதங்களில் ஓய்வூதிய உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசு நிதி
இந்த உதவித்தொகை திட்டத்தில், இந்திரா காந்தி பெயரில் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகைக்கு மத்திய அரசு தனது பங்களிப்பை வழங்குகிறது. அதன்படி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் 60 வயது முதல் 79 வயது வரை ரூ.200-ம், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.500-ம் வழங்குகிறது. அதில் மீதி தொகையை தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்குகிறது. அதே போல் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் திட்டத்திற்கு ரூ.300 வழங்குகிறது. அதில் மீதி ரூ.700-ஐ சேர்த்து தமிழக அரசு ரூ.1000 வழங்குகிறது.
Related Tags :
Next Story