விவசாயிகள் உண்ணாவிரதம்
முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்டெடுப்போம், வைகை அணை பாசனத்தை பாதுகாப்போம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில், பெரியாறு அணை நீர் கொள்ளளவை 142 அடியாக உறுதிப்படுத்த வேண்டும், 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும், பெரியாறு அணையின் அதிகாரம் முழுமையும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திட்ட அறிக்கை
மேலும் பேபி அணையை பலப்படுத்த கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும், தமிழக பொறியாளர்கள் அணைப் பகுதியில் தங்கி பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும், புதிய அணை திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும், அணை நீர் சேமிப்பு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கார் பார்க்கிங், சொகுசு விடுதிகளை அகற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story