ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு; சமையல்காரர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 3 பேர் கைது
பத்ராவதி அருகே ஓட்டலில் சாப்பிட்ட பணத்தை கேட்டதால் உரிமையாளரை தாக்கியதுடன் சமையல்காரர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை எடுத்து கொட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
சிவமொக்கா:
சாப்பிட்டதற்கு பணம் தராததால்...
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி நகர் உத்தாகாலனி கமர்சியல் தெரு பகுதியில் லோகேஷ் குமார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சமையல்காரராக மனோஜ்குமார் என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல் மதுஅருந்தியுள்ளனர். பின்னர் குடிபோதையில் அவர்கள், லோகேஷ் குமாரின் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது அவர்கள், சப்ளையரிடம் தங்களுக்கு வேண்டிய அசைவ உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டனர். இதையடுத்து சிறிதுநேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் பணம் கட்டாமல் ஓட்டலில் இருந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதைபார்த்த ஓட்டல் உரிமையாளர், சாப்பிட்டதற்கான பணத்தை செலுத்திவிட்டு செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் சாப்பிட்டதற்கு பணம் தரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.
சமையல்காரர் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்...
இதனால் 5 பேருக்கும், ஓட்டல் உரிமையார் லோகேசுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து லோகேசை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சமையல்காரர் மனோஜ் குமார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார்.
அப்போது அவர்கள், ஓட்டலில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை சட்டியுடன் எடுத்து மனோஜ்குமார் முகத்தில் ஊற்றியுள்ளனர். இதில் மனோஜ்குமார் முகம், கண், காது மற்றும் நெஞ்சு பகுதிகள் வெந்து கருகி அலறி துடித்து உயிருக்கு போராடினார். அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே 5 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்கள்.
3 பேர் கைது
இதுபற்றிய புகாரின் பேரில் பத்ராவதி நியூ டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் தராத தகராறில் சமையல்காரர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ெதாடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். கைதானவர்களின் பெயர்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story