நகராட்சி பேரூராட்சிகளில் செலவினங்களை குறைக்க வேண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
குமரி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செலவினங்களை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செலவினங்களை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கூட்டம்
குமரி மாவட்டத்தில் நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிக்க தனி கவனம் செலுத்தி, பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் விளங்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. இதே போல நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதையும், கோழி கழிவுகளை கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிவாயு தகன மையம்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் விரிவு படுத்த வேண்டும். மேலும் பேரூராட்சியில் உள்ள அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வது அவசியம். அனைத்து புள்ளி விவரங்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் சொத்து வரி, குடிநீர் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற வேண்டும்.
குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். எனவே அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஒவ்வொரு பேரூராட்சி கவுன்சிலர்களும் அந்தந்த பகுதிகளில் 50 மரக்கன்றுகளை நடவேண்டும். மேலும் குடிநீர் மற்றும் தெரு விளக்கு பிரச்சினையை கையாள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில் நவீன எரிவாயு தகன மையம் உள்ளது. இதே போல 4 நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் எரிவாயு தகன மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செலவினங்களை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மானிய விலையில் எந்திரங்கள்
முன்னதாக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.3.61 லட்சம் மதிப்பிலான விவசாய எந்திரங்களை மானிய விலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். இதைத் தொடர்ந்து மின் வாரியத்தில் பணியின் போது பலியான மின்வாரிய பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். மொத்தம் 4 பேருக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் தக்கலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ், பள்ளியில் தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று கூறினார். அதோடு பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றுச்சுவர் மற்றும் உதயகிரி கோட்டை ஆகியவற்றையும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அப்போது பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவரை சீரமைக்க ரூ.14 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதி பெற்று சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
வன அதிகாரி
நிகழ்ச்சிகளில் மாவட்ட வன அதிகாரி இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்யஜோஸ், மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் கொளஞ்சி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) அவ்வை மீனாட்சி, மின்சாரத்துறை நிர்வாக மேற்பார்வையாளர் பரிபுரணம், தி.மு.க. மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், துணை தலைவர் மணி, அரசு வக்கீல் ஜெகதேவ், கல்குளம் தாசில்தார் வினோத், காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜ், என்ஜினீயர் வர்க்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---
Related Tags :
Next Story