இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும்: புறநகர் மின்சார ரெயில்களில் கத்திமுனையில் பணம், செல்போன் பறிக்கும் கும்பல்
இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகளிடம் பணம், செல்போனை சமூக விரோத கும்பல்கள் பறித்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை புறநகர் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இரவு நேரத்தை பொறுத்தமட்டில் நள்ளிரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-சென்னை கடற்கரை வரையிலான கடைசி ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரெயில்களும் நள்ளிரவு 1 மணிக்கு சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தை சென்றடைகிறது.
இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் பெரும்பாலானவர்கள் இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று வெளியூர் சென்று விட்டு நள்ளிரவு வருபவர்களும் இந்த ரெயில்களை பயன்படுத்தி வீடு திரும்புகின்றனர். இரவு 11 மணிக்கு முன்னதாக பெரும்பாலானோர் வீடு திரும்பி விடுவதால் இதன்பின்பு இயக்கப்படும் ரெயில்களில் பகல் நேரத்தை போன்று கூட்டம் இருப்பதில்லை. குறைவான எண்ணிக்கையிலான நபர்களே இந்த ரெயில்களில் பயணம் செய்கின்றனர்.
இதனை சமூக விரோத கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்கும் செயல் தற்போது நடந்தேறி வருகிறது.
ஓரிரு பயணிகள் மட்டும் இருக்கும் பெட்டிகளை குறிவைத்து 4 அல்லது 5 பேர் கொண்ட சமூக விரோத கும்பல்கள் ஏறி குறிப்பிட்ட ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக பயணிகளை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து செல்கின்றது. இது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கடற்கரையில் இருந்து-தாம்பரத்துக்கு நள்ளிரவு இயக்கப்பட்ட கடைசி ரெயிலில் ஏறிய ஒரு கும்பல் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளை மிரட்டி பணம், செல்போனை பறித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் மற்றொரு பெட்டியில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போன் மூலம் ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கான தொலைபேசி எண்ணை புகார் அளிப்பதற்காக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், யாரும் அந்த தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றும், இதுவும் சமூகவிரோத கும்பலுக்கு சாதகமாக உள்ளதாகவும் அந்த பயணி தெரிவித்தார்.
எனவே, இரவு நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் ஏறி பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேமரா பொருத்தும் பணி மந்தம்
நிர்பயா நிதியின் கீழ் சென்னை புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் கேமரா பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கிற்கு பின்பு ரெயில் நிலையங்களில் கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து அதிகம் பேசப்பட்டது.
கேமரா பொருத்துவதற்கு நிதி ஒதுக்கியும் பெரும்பாலான ரெயில் நிலையங்களில் இந்த பணி முழுமையாக நிறைவடையவில்லை. இதுவும், சமூக விரோத கும்பலுக்கு சாதமாக உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, கேமரா பொருத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story