மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி தேரோட்டம் - திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர்


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி தேரோட்டம் - திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 16 March 2022 5:49 AM IST (Updated: 16 March 2022 5:49 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான பங்குனி விழா கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு மற்றும் விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய திருநாளான தேர்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு கபாலீசுவரர், கற்பகம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வேலு, கோவில் இணை-கமிஷனர் தா.காவேரி ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்கு மாடவீதி வழியாக இழுத்து வந்து பகல் 12 மணி அளவில் கிழக்கு மாடவீதிக்கு நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஒவ்வொரு மாடவீதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று தேரை இழுத்தனர். இதுதவிர கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் நின்றபடியும் பக்தர்கள் தோரோட்டத்தை கண்டுகளித்தனர்.

மாடவீதிகளில் தேர் வரும் போது தேரின் முன்பகுதியில் கொரோனா கிருமிகளை அழிக்கும் வகையில் மூலிகைகளால் பூகை போடப்பட்டது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பக்தர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நீர்மோர், குளிர்பானகங்களை வழங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாலை 5.30 மணி வரை தேரில் எழுந்தருளி இருந்த சுவாமி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மயிலாப்பூருக்கு வந்த பறக்கும் ரெயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொடர்ந்து இன்று (புதன் கிழமை) பகல் விழாவாக வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.

Next Story