சாலை வசதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை


சாலை வசதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2022 6:04 AM IST (Updated: 16 March 2022 6:04 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அடுத்த தர்மபுரி கண்டிகை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை வசதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருத்தணி,

திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்டது தர்மபுரி கண்டிகை கிராமம். இங்கு, 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியவாசிய தேவைகளுக்கு திருத்தணி வந்து செல்ல எஸ்.அக்ரஹாரம் ஏரியில் இறங்கி செல்ல வேண்டியது உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் ஏரி நிரம்பியது.

இதனால், கிராம மக்கள் சாலை வசதி இன்றி பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஒ., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கைவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடும்பத்தினருடன் வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் கிராம மக்களை வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளே அனுமதித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் சப்-கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, திருத்தணி ஆர்.டி.ஒ. சத்யா, திருத்தணி தாசில்தார் ஆகியோர் சம்மந்தபட்ட நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில் நில உரிமையாளர்கள் சாலை அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் நில அளவீடு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

Next Story