தூத்துக்குடி மாவட்டத்தில் 51 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள 51 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள 51 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
கொரோனா தொற்று
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 13 லட்சத்து 34 ஆயிரத்து 610 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 62 ஆயிரத்து 996 பேருக்கு) 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 03.01.2022 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 69 ஆயிரத்து 921 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 43 ஆயிரத்து 909 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
மாணவர்கள்
இதன் தொடர்ச்சியாக 12 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. மாணவர்களுக்கு முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசி போடப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து 12 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து உள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 51 ஆயிரத்து 500 பேர் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
ஆணையாளர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story