பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி


பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 March 2022 6:09 PM IST (Updated: 16 March 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

திருச்சி, மார்ச்.17-
பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
போலீஸ் நிலையத்தில் கையெழுத்து
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, அவர் திருச்சியில் தங்கி இருந்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த 14-ந் தேதி ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட்டார். இதனைத்தொடர்ந்து 2-வது முறையாக  அவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வாழ்த்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி
தி.மு.க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.வை அழித்து, ஒழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு, முன்னாள் அமைச்சர்கள், கழக முன்னோடிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மக்களுக்கான எந்தவித அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. மக்களுக்கான பாதுகாப்பு வழங்க முடியாத அரசாக தி.மு.க. உள்ளது. மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படை கட்டமைப்பு வசதி, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது உள்ளிட்ட எதையுமே செய்யாமல் பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள்.
விஷமத்தனமான பிரசாரம்
ஓரிரு வழக்குகள் மட்டுமல்ல, இந்திய தண்டனை சட்டப்பிரிவில் உள்ள அத்தனை வழக்குகளை போட்டாலும் அஞ்சாதவர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தற்போது ஒரே பொய்யை திரும்ப, திரும்ப கூறி விஷமத்தனமான பிரசாரம் செய்து, அ.தி.மு.க. மீது மக்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டம் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதியை நிலைநாட்டுவோம். நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, நான் திருச்சியில் தங்கி இருந்து போலீஸ்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆகையால் எனது வாயை மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்களின் வாயையும் மூடமுடியாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வர் என்று கூறுவது, இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story