தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்


தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 16 March 2022 6:34 PM IST (Updated: 16 March 2022 6:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விழிப்புணர்வு போட்டிகள்
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, 'எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேசிய அளவில் வினாடி வினா, பாட்டுப்போட்டி, காணொலி தயாரித்தல், சுவரொட்டி, விளம்பர படம் வடிவமைப்பு மற்றும் வாசகம் எழுதுதல் போட்டி ஆகிய 5 தலைப்புகளில் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில், அமெச்சூர் போட்டியாளர், தொழில்முறை போட்டியாளர் மற்றும் நிறுவனம் சார்ந்த போட்டியாளர் ஆகிய மூன்று பிரிவுகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். பள்ளி மற்றும் கல்லூரியை சார்ந்த மாணவ, மாணவிகள் நிறுவனம் சார்ந்த போட்டியாளர்கள் என்ற பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.
பரிசு
பாட்டுப் போட்டி, காணொலிக் காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரப் படம் வடிவமைப்புபோட்டிஆகியவை நிறுவனம் சார்ந்த நபர்கள், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் ஆகிய மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அது மட்டுமின்றி, ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க சிறப்புப் பிரிவின் கீழ் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். நிறுவனம் சார்ந்த நபர்கள் என்ற பிரிவில் 4 சிறப்புப் பரிசுகளும், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் என்ற பிரிவில் தலா 3 சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும். வினாடி வினாப் போட்டி வெற்றியாளர்களுக்கு ஊக்கப் பரிசாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிசுப்பொருள் மற்றும் அடையாளவில்லை வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும், போட்டியின் மூன்று நிலைகளை நிறைவு செய்ததன் பேரில் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.
நீட்டிப்பு
இந்த போட்டிகளுக்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே போட்டியில் பங்கேற்பவர்கள் அனைத்து பதிவுகளையும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து, வருகிற 31-ந் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story