17 சங்கங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வாக வாய்ப்பு


17 சங்கங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வாக வாய்ப்பு
x
தினத்தந்தி 16 March 2022 9:44 PM IST (Updated: 16 March 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் பதவிக்கு 17 பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

பொள்ளாச்சி

ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் பதவிக்கு 17 பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

வேட்புமனு தாக்கல்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டில் பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, வடக்கலூர், பெரியணை ஆகிய பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும், புதிய ஆயக்கட்டில் காளியாபுரம், ஒடையகுளம், மார்ச்சநாயக்கன்பாளையம், சேத்துமடை, கோட்டூர்-1, கோட்டுர்-2, பெத்தநாயக்கனூர், அங்கலகுறிச்சி, துறையூர், கம்பாலப்பட்டி, சமத்தூர், நாயக்கன்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மண்ணூர், திம்மங்குத்து, வேட்டைக்காரன்புதூர் ஆகிய பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும் என மொத்தம் 21 சங்கங்கள் உள்ளன. இதில் ஆண்கள் 9972 பேரும், பெண்கள் 3119 பேரும் சேர்த்து மொத்தம் 13 ஆயிரத்து 91 வாக்காளர்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பாசன சங்க தலைவர் தேர்தல் நடத்தாமல் இருந்தது. தற்போது கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு 21 பாசன சங்க தலைவர், 90 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்பட்டன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகவேல் வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெற்றார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி ஆகியோர் உடன் இருந்தனர். தலைவர் பதவிக்கு 17 பேரும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு 86 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் தலைவர் பதவிக்கு 27 பேரும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு 96 பேரும் போட்டியிடுகின்றனர். 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். பழைய ஆயக்கட்டில் பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை, வடக்கலூர் ஆகிய பாசன சங்கங்களுக்கு தலா ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதனால் மேற்கண்ட சங்கங்களுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

27-ந் தேதி முடிவுகள் அறிவிப்பு

மேலும் புதிய ஆயக்கட்டில் மார்ச்சநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மண்ணூர் தவிர மற்ற சங்கங்களில் தலா ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதனால் அவர்களும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அரியாபுரம், ஒடையகுளம், நாயக்கன்பாளையம், மார்ச்சநாயக்கன்பாளையம் தவிர மற்ற பாசன சங்கத்தில் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தலா ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். 

வருகிற 21-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பிறகு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வருகிற 27-ந் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story