மங்கலம் அருகே நூல்மில்லில் பயங்கர தீ விபத்து


மங்கலம் அருகே நூல்மில்லில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 16 March 2022 10:05 PM IST (Updated: 16 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே நூல்மில்லில் பயங்கர தீ விபத்து

மங்கலம்:
மங்கலம் அருகே நூல்மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ரூ.20 லட்சம் எந்திரம், பஞ்சுகள் எரிந்து நாசமானது. 
நூல்மில்லில் தீ விபத்து 
மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் கணேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் நூல்மில் உள்ளது. இந்த  நூல் மில்லில் நேற்று 6 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது  மதியம் 2 மணியளவில் நூல்மில்லில் உள்ள எந்திரத்தில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இந்த தீப்பொறியால் அங்குள்ள எந்திரம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
இந்த தீ மளமள வென்று நூல்மில் முழுவதும் பரவியது.  இதனால் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். 
பின்னர் நூல்மில் உரிமையாளருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும், மங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான 5 வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் நூல்மில்லில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து  அணைத்தனர். 
எந்திரங்கள் சேதம்
இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் தீக்கிரையானதாக நூல் மில் உரிமையாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Next Story