காட்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணி


காட்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 16 March 2022 10:17 PM IST (Updated: 16 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணியால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

காட்பாடி

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் கடலூர்- சித்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லவும், ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரவும் இந்த மேம்பாலம் முக்கிய பாலமாகும்.
இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ், லாரிகள் சென்று வருகின்றன.

இந்த மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த பள்ளங்களில் சிக்கி இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. இந்த மேம்பாலம் வழியாக செல்லும்போது விரிசலும், பள்ளமும் இருப்பதால் வாகனங்கள் மெதுவாகத்தான் செல்ல முடிகிறது. அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேம்பால சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

இதற்காக மேம்பால சீரமைப்புக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்பு பணி நடக்கிறது... நடக்கிறது... நடந்து கொண்டே... இருக்கிறது. பணியும் முடிந்தபாடில்லை. மக்களும் எளிதாக இந்த பாலத்தை கடக்க முடிவதில்லை. தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவர் காட்பாடி வழியாக வந்ததால் இந்த பாலத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இந்த நிம்மதி தொடரவில்லை. மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்பாடி தொகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்தார். இதேபோல கதிர்ஆனந்த் எம்.பி., மாவட்ட கலெக்டர், ரெயில்வே துறை அதிகாரிகள் அடிக்கடி இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்தனர். ஆனாலும் மேம்பால சீரமைப்பு பணி மந்தகதியிலேயே நடக்கிறது.

மீண்டும் போக்குவரத்து நெரிசல்

இதனால் தற்போது மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. தினந்தோறும் இந்த மேம்பாலத்தை கடக்கும் போது வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காட்பாடி-சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து மேம்பாலம் வரையும், மேம்பாலத்தில் இருந்து கிளித்தான்பட்டறை வரையும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் காட்பாடியில் பாலத்துக்கு அந்த பக்கம் நடைபெறும் விழாக்களில் அல்லது திருமண நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்பாக சென்றால்தான் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் எந்த நேரத்தில், எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சொல்லமுடியாது.

பள்ளிகள், அலுவலகங்கள்

காட்பாடி பாலத்திற்கு அந்தப்பக்கம் உழவர்சந்தை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சன்பீம் பள்ளி, காட்பாடி போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், கிழித்தான் பட்டறையில் தாலுகா அலுவலகம், ராகவேந்திரா சுவாமி கோவில், கல் புதூரில் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பல அலுவலகங்கள், பள்ளிகள், ஆன்மிக தலங்கள் உள்ளன.
இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் தேவைகளுக்காக அலுவலகங்களுக்கும், மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கும், பக்தர்கள் கோவில்களுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் இந்த ரெயில்வே மேம்பாலத்தை கடந்து தான் காட்பாடிக்கு செல்லவேண்டும். தினந்தோறும் மக்கள் நொந்து கொண்டே தான் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஆய்வு தான் நடக்கிறது, பணிகள் நடக்கவில்லை

தமிழகத்தையும், ஆந்திராவையும் இணைக்கும் இந்த காட்பாடி ெரயில்வே மேம்பாலம் ஒரு முக்கிய பாலமாகும். இந்த பாலம் பழுதடைந்து சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் ஏனோ பணிகள் இன்னும் நடைபெறவில்லை.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆய்வு... ஆய்வு... ஆய்வு... என்று தான் பாலத்தை ஆய்வு செய்கிறார்களே தவிர பணிகள் நடந்த பாடில்லை. பணிகளை துரிதப்படுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் வரும் மாதங்களில் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத முடியாது. எனவே இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க முன்வரவேண்டும்.

 மேலும் பாலத்துக்கு இரு பக்கமும் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும். பொதுமக்கள் தான் நமக்கு எஜமானர்கள் என ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எஜமானர்களாகிய  நாங்கள் சொல்வதை அதிகாரிகள் செவிமடுத்து மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story