தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 March 2022 10:51 PM IST (Updated: 16 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள விளாங்குடி பெரியஏரி கரையில் இருந்து காத்தான் குடிகாடு கிராமத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தேளூர் துணைமின் நிலையத்தில் இருந்து பெரியஏரி வழியாக பாளையக்குடி பகுதிகளுக்கும், அரியலூர் மின்நிலையத்தில் இருந்து பெரியஏரிவழியாக நடுவலூர் பகுதிக்கும் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. தற்போது பெரிய ஏரி கரையில் ஜல்லிகற்கள் மற்றும் கிராவல் மணல் கொட்டி உயரம் ஏற்றி சாலை அமைக்கப்பட்டு வருவதால் அந்த வழியே கனரக வாகனங்கள் செல்லும்போது மின்கம்பியில் உரசினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரியலூர்.

தெரு நாய்களை பிடிக்க வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்டம், அம்மாப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர்  கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது.  சாலைகளில் நாய்கள் திடீரென்று குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள ஆலங்காடு மற்றும் பள்ளத்துவிடுதி பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு பஸ் தடம் எண் 3-யை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ்  புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி, பள்ளத்துவிடுதி, ஆலங்காடு வழியாக கொத்தமங்கலம் வரை செல்லும். ஆனால் முறையாக பஸ் இயக்கப்படாததால் ஆலங்காடு போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை பள்ளிகளுக்கு நடந்தே செல்லும் நிலையும் ஏற்படுகிறது.  சில நேரங்களில் மாணவர்கள் மணிகணக்கில் காத்தும் கிடக்கின்றனர். மேலும் கல்லூரி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  அரசு பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.

கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சிதம்பரம் கார்டன் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது ஊரின் மையப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கார்டன் பகுதிக்குள் புகுந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து வருதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.

புகை அதிகமாக வெளியேறுவதால் கண் எரிச்சல்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் புகழூர் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கரிதூள் கடந்த ஒரு மாதமாக காற்றில் பறந்து புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு இருமல், தொண்டைவலி, கண் எரிச்சல் மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.

Next Story