தடுப்பு கட்டையில் அரசு பஸ் மோதல்; 18 பயணிகள் படுகாயம்
விருத்தாசலம் அருகே சாலையின் நடுவில் உள்ள தடு்ப்பு கட்டை மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
விருத்தாசலம்,
சேலத்தில் இருந்து நேற்று அதிகாலை 1 மணியளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 25 பயணிகள் இருந்தனர். திருநாவுக்கரசு என்பவர் பஸ்சை ஓட்டினார். செந்தில்குமார் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது.
18 பேர் படுகாயம்
இதில் பயணிகள் மயிலாடுதுறையை சேர்ந்த ரவி(வயது 42), சீமா(32), லோகேஸ்வரன்(9), புவனகிரி சுதாகர்(29), பிரபாகரன்(32), வத்தராயன்தெத்து பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(45), சீர்காழி மகேந்திரன்(32), கலா(42), கொள்ளிடம் முருகானந்தம்(53), சேலம் பழனிசாமி(57), செந்துறை தாலுகா புதுப்பாளையம் கருணாமூர்த்தி(22), விருத்தாசலம் தாலுகா சொட்டவனம் பகுதி ஜெயவேல்(37), தர்மபுரி சரவணன்(37), மூர்த்தி(28), ராமு(44), நாமக்கல் ராசிபுரம் முருகேசன்(26), ஈரோடு மாவட்டம் அந்தியூர் ராமசாமி(43), சிதம்பரம் சக்திவேல்(27) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பாதசாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் முருகேசன், ராமசாமி, சக்திவேல் ஆகிய 3 பேரும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று சென்றனர். மீதமுள்ள அனைவரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தடுப்பு கட்டையில் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பகுதி சக்கரம் கழன்று ஓடியது. மேலும் என்ஜின் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story