மத்திய மந்திரி நாராயண் ரானே, நிதேஷ் ரானேவுக்கு முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 16 March 2022 10:54 PM IST (Updated: 16 March 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

திஷா சாலியன் மரண அவதூறு வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானே மற்றும் அவரது மகன் நிதேஷ் ரானேவுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

மும்பை, 
திஷா சாலியன் மரண அவதூறு வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானே மற்றும் அவரது மகன் நிதேஷ் ரானேவுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. 
அவதூறு வழக்கு 
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் 2020-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் உயிரிழந்த 6 நாளில் சுஷாந்த் சிங் வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மத்திய மந்திரி நாராயண் ரானே பத்திரிகையாளரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் திஷா சாலியன் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக திஷா சாலியனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மால்வாணி போலீசார் நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ்ரானே எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
மனு தாக்கல்
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக தந்தை, மகன் இருவரும் முன்ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது நாராயண் ரானே, நிதேஷ் ரானே ஆகியோர் மாநில அரசால் குத்துச்சண்டை பயிற்சிக்கு பயன்படுத்தும் ‘பஞ்ச் பேக்’ ஆகி விட்டனர் என அவரது வக்கீல் கூறினார். 
மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற ஒரு வழக்கில் 5 நிமிடத்தில் வாக்குமூலத்தை பதிவு செய்யமுடியும். ஆனால் அவரிடம் 8 முதல் 10 மணி நேரம் விசாரணை தேவையில்லை. இதேபோன்று மேலும் பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 
இந்த வழக்கில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்றார். 
பொறுப்புடன் பேசவேண்டும்...
அதேபோல அரசு வக்கீல் கூறுகையில், ‘ நாராயண் ரானே ஒரு கவுரமான பொறுப்பில் உள்ள ஒரு மத்திய மந்திரி, நித்தேஷ் ரானே ஒரு எம்.எல்.ஏ. அவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை. அவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார். 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு, மத்திய மந்திரி   நாராயண் ரானேவுக்கும், மகன் நிதேஷ் ரானேவுக்கும்  முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Next Story