சிறுவர்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர்
சிறுவர்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் தொடக்க நிகழ்ச்சி தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் சிவக்குமார், உதவி இயக்குனர் (சுகாதாரம்) ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்பிகாபதி வரவேற்றார்.
அச்சமின்றி...
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 ஆயிரத்து 700 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிறுவர்கள் 28 நாட்கள் இடைவெளியில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சிறுவர்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 41 சிறுவர்களுக்கு முதல் தவணை கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட 4 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ரவீன், டாக்டர்கள் சந்தோஷ்குமார், மணிகண்டன், வட்டார கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சுகாதார செவிலியர்கள் சரஸ்வதி, உஷா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story