76,500 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


76,500 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 16 March 2022 11:00 PM IST (Updated: 16 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 76 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர், 

கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 16.2.2021 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இது வரை 21 லட்சத்து 97 ஆயிரத்து 793 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 287 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் குழந்தைகள் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 3.1.2022 முதல் அனைத்து நாட்களிலும் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள அனைத்து அரசு, தனியார், உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இது வரை 1 லட்சத்து 662 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இதையடுத்து 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு மருத்துவ குழு மூலம் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடலூர் பீச் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, தேசிய சுகாதார மாவட்ட ஒருங்கிணைப் பாளர் காரல், மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜகணபதி, தாசில்தார் பூபாலச்சந்திரன், நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் சரிதா, ராஜ்மோகன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அகஸ்டின் பிரபாகரன், பாலாஜி மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story