கண்டியாநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்
கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
பொன்னமராவதி:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல்விழாவை முன்னிட்டு பிடாரி அய்யனார் கோவில் அருகே உள்ள இடையன்கண்மாயில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடர்ந்து வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 300 மாடு பிடி வீரர்கள் இரண்டு பிரிவுகளாக களமிறங்கி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 716 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 3 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் டி.வி., சைக்கிள், பீரோ, மிக்சி, வெள்ளி நாணயம், குக்கர், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
ஜல்லிக்கட்டை பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story