கரந்தை வடவாறு பாலம் இடிக்கும் பணி தொடங்கியது போக்குவரத்து மாற்றம்
தஞ்சையில் கரந்தை வடவாறு பாலம் இடிக்கும் பணி தொடங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் கரந்தை வடவாறு பாலம் இடிக்கும் பணி தொடங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாலங்கள் கட்டும் பணி
தஞ்சை காந்திஜி சாலையில் கல்லணைக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை. இந்த பாலங்கள் சேதம் அடைந்து இருந்ததால் அவற்றை இடித்துவிட்டு புதிதாக 2 இடங்களிலும் தலா 2 பாலங்கள் வீதம் கட்டப்பட உள்ளது.
ஒவ்வொரு பாலமும் தலா ரூ.1½ கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்காக கல்லணைக்கால்வாயின் குறுக்கே உள்ள இர்வீன்பாலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடைபெறுவதால் கடந்த 9-ந் தேதி முதல் காந்திஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வடவாறு பாலம் இடிப்பு
இந்த நிலையில் கரந்தையில் உள்ள வடவாறு பாலம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனால் இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுவழியில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதாவது தஞ்சை மாநகரில் இருந்து திருவையாறு, அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளை நோக்கி செல்லும் பஸ்கள் எல்லாம் கொடிமரத்துமூலை, வடக்குவாசல், சி.ஆர்.சி. டெப்போ பின்புறம், பிருந்தாவனம், களிமேடு வழியாக தஞ்சை-பள்ளியக்கிரஹாரம் பைபாஸ் சாலையின் வழியாக இயக்கப்பட்டன.
மேலும் சோழன்சிலை, சீனிவாசபுரம், ஜெபமாலைபுரம், பிருந்தாவனம், களிமேடு வழியாகவும் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. திருவையாறு, அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து தஞ்சைக்கு வரக்கூடிய பஸ்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்கிரஹாரம், வெண்ணாறு பாலம் அருகே உள்ள பழைய திருவையாறு சாலை வழியாக வந்து பூக்குளம், வடக்குவாசல் வழியாக கொடிமரத்துமூலை வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு வந்தன.
இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு
இந்த பகுதியில் இருந்து வரும் பஸ்கள் புறவழிச்சாலையின் வழியாகவும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழைய திருவையாறு சாலையின் வழியாக தஞ்சை நகருக்குள் வரக்கூடிய பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் இருந்து செல்லக்கூடிய பஸ்கள் பழைய திருவையாறு சாலையின் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரந்தை வடவாறு பாலம் இடிக்கப்படுவதையொட்டி வடக்குவாசல் நுழைவு பகுதியின் அருகே இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story