காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
காரைக்குடி,
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழா
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவிலின் மாசி-பங்குனி திருவிழா கடந்த 8-ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 40 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நேற்று முன்தினம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி, அக்னி காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பால்குட திருவிழாவையொட்டி உள்ளூர், மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முத்தாலம்மன் கோவில் மற்றும் காரைக்குடி நகரில் உள்ள பல்வேறு கோவில்களிலிருந்து முத்து மாரியம்மன் கோவிலை நோக்கி பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் காரைக்குடி நகரெங்கும் மஞ்சளாடை அணிந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துசெல்லும் காட்சியாகவே இருந்தது. இதனால் நகரே மஞ்சள் மயமாக இருந்தது. பக்தர்களுக்கு தேவையான பால் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் லாரி லாரியாக கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டது.
தீ மிதித்தனர்
சிறுவர் முதல் பெரியவர்கள் பால்குடம் எடுத்து வந்தனர் பெண்கள் கைக்குழந்தைகளுடனும் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் ஒரு அடி முதல் 12 அடி வரை உள்ள வேல்களை உடம்பில் குத்தியபடி சில பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு பக்தர் உடம்பு முழுவதும் வேல்களை குத்திக்கொண்டு முதுகில் குத்தப்பட்ட வேல் அலகால் சிறு தேரை இழுத்து கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஒரு பக்தர் பறவைக்காவடி எடுத்து வந்தார். பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்துவந்த பக்தர்கள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழி என்றழைக்கப்படும் பகுதியில் சென்று தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கொண்டு வந்தபால் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ராட்சத அண்டாக்களில் நிரப்பப்பட்டது. பின் மின் மோட்டார் மற்றும் குழாய்கள் மூலம் கருவறைக்கு எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அன்னதானம்
பின்னர் 6 மணியளவில் கோவில் கரகத்தை பருப்பூரணியில் கொண்டு சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவினையொட்டி காரைக்குடி நகரெங்கும் தண்ணீர்பந்தல், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவினையொட்டி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் நகர் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இத்திருவிழாவில் கலந்துகொள்ள தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல் இப் பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்களும் வந்திருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் நகர் முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்
Related Tags :
Next Story