12-14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
தஞ்சை மாவட்டத்தில் 12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4,021 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் 12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4,021 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து 18 வயதை தாண்டியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
12-14 வயது சிறுவர்கள்
மேலும் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 3-வது டோசாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்தநிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவித்தது.
அதன்படி 12 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என வந்த கோரிக்கைகளை ஏற்று 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
தொடங்கியது
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இது குறித்து மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 70 ஆயிரத்து 600 சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்நாளில் 142 மையங்கள் மூலம் 4 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story