வாலிநோக்கம் கடல் பகுதியில் குவிந்துள்ள உப்பு கொத்தி பறவைகள்


வாலிநோக்கம் கடல் பகுதியில் குவிந்துள்ள உப்பு கொத்தி பறவைகள்
x
தினத்தந்தி 16 March 2022 11:41 PM IST (Updated: 16 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

உப்பு கொத்தி பறவைகள் குவிந்துள்ளன.

சாயல்குடி, 
வாலிநோக்கம் கடலோர பகுதியில் அதிக அளவில் உப்பு கொத்தி பறவைகள் குவிந்துள்ளன. 
உப்பு கொத்தி பறவைகள் 
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் ஆமை, கடல் பசு, கடல் குதிரை, நட்சத்திர மீன்கள், பவளப்பாறைகள் கடல் விசிறி உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளை சுற்றிய கடல் மற்றும் கடற்கரை பகுதியில் பல அரிய வகை பறவைகள் உள்ளதாக வனத்துறை கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாலிநோக்கம் பகுதியில் உள்ள கடலோர மணல் திட்டுகள் மற்றும் உப்பள பாத்தி மற்றும் அருகே உள்ள நீர் நிலைகளில் பொன்னிற உப்பு கொத்தி என்ற வகை பறவைகள் அதிக அளவில் குவிந்துள்ளன. குறிப்பாக உப்பள பாத்தி அருகே உள்ள நீர் நிலைகளில் குவிந்துள்ள இந்த பறவைகள் கடல் நீரில் உள்ள புழு பூச்சி உள்ளிட்டவைகளை கூட்டமாக நின்று உண்கின்றன. இவ்வாறு இரை தேடும் இந்த உப்பு கொத்தி பறவைகள் திடீரென ஒன்று சேர்ந்து வளைந்து நெளிந்து அதிவேகமாக பறப்பதையும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்க்கின்றனர்.
வளைந்து, நெளிந்து பறக்கும் 
இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவு மற்றும் கடற்கரை பகுதியை சுற்றி 150 வகையான பல அரிய வகை பறவைகள் உள்ளன. அதுபோல் வாலிநோக்கம் கடலோரபகுதி மற்றும் உப்பள பாத்திகளை சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் சாம்பல் உப்பு கொத்தி, பொன்னிற உப்பு கொத்தி என இரண்டு வகையான உப்பு கொத்தி பறவைகள் அதிகளவில் குவிந்துள்ளன. இந்த உப்புக்கொத்தி பறவைகளை பெரும்பாலும் கூட்டமாகவே காணமுடியும். 
இந்த பறவைகளை யாரேனும் தொந்தரவு செய்தாலோ, ஏதேனும் சத்தம் ஏற்பட்டாலோ அவைகள் வளைந்து, நெளிந்து அதிவேகமாக பறந்து செல்லும் தன்மை கொண்டது. கடல்நீரில் உள்ள புழு, பூச்சிகள் இறால் உள்ளிட்ட உயிரினங்களை சாப்பிடும். வாலிநோக்கம் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான உப்பு கொத்தி பறவைகள் இந்த ஆண்டு குவிந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story