5 டன் ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பறிமுதல்


5 டன் ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2022 11:49 PM IST (Updated: 16 March 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே தனியார் அரிசி ஆலையில் 5 டன் ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாவாக அரைத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

சமயபுரம், மார்ச்.17-
சமயபுரம் அருகே தனியார் அரிசி ஆலையில் 5 டன் ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாவாக அரைத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அரிசி ஆலையில் சோதனை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட ரைட் சிட்டி அருகே சுடுகாடு பகுதியையொட்டி உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை கடத்தி சென்று, அதனை மாவாக அரைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அரிசி ஆலைக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அரிசி ஆலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், காரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அந்த ஆலையில் வைத்து, அதை கோதுமையுடன் சேர்த்து மாவாக அரைத்து கோழி தீவனம் மற்றும் மாட்டு தீவனத்துக்காக தயார் செய்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை, 15 டன் குருணை அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சீல் வைப்பு
மேலும், இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலையின் உரிமையாளர் யார்?. எங்கிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வருகிறார்கள். எத்தனை ஆண்டுகளாக அரிசி ஆலை இயங்கி வருகிறது. ஆலைக்கு உரிய அனுமதி உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ரேஷன் அரிசியை கடத்திச் சென்று மாவாக அரைத்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த அரிசி ஆலைக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அதிகாரி மரகதவள்ளி தலைமையில் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று அரிசி ஆலைக்கு சீல் வைத்தனர். திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story