மகாராஜகடை அருகே யானையை விரட்ட பட்டாசு வெடித்ததில் வேட்டை காவலர் காயம்
மகாராஜகடை அருகே யானையை விரட்ட பட்டாசு வெடித்தபோது கையில் பட்டாசு வெடித்து வேட்டை காவலர் காயம் அடைந்தார்.
குருபரப்பள்ளி:
மகாராஜகடை அருகே யானையை விரட்ட பட்டாசு வெடித்தபோது கையில் பட்டாசு வெடித்து வேட்டை காவலர் காயம் அடைந்தார்.
9 யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊடேதுர்க்கம், சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி, வேப்பனப்பள்ளி மற்றும் மகாராஜகடை ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். அதன்படி கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை கிராமம் அருகே அங்கனாமலை வனப்பகுதியில் உள்ள துரை ஏரியில் குட்டியுடன் 9 யானைகள் முகாமிட்டு உள்ளன.
தமிழக, ஆந்திர மாநிலத்தை இணைக்ககூடிய இந்த வனப்பகுதியில் முகாமிட்டு உள்ள யானைகள் காட்டூர், பூங்குர்த்தி, ஏக்கல்நத்தம் மற்றும் ஆந்திர மாநிலம் நடுமூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களையும், தண்ணீர் குழாய்களையும் சேதம் செய்து வருகிறது.
பட்டாசு
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை பூங்குர்த்தி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்தது. அந்த யானை கிராமத்துக்குள் நுழையாமல் தடுக்க கிருஷ்ணகிரி வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அப்போது வேட்டை காவலர் சிலம்பரசன் யானையை விரட்ட பட்டாசு கொளுத்தி வீச முயன்றபோது, பட்டாசு கையிலேயே வெடித்தது. இதில் அவரது வலதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட வனத்துறையினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story