பாலப்பட்டி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
பாலப்பட்டி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்:
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்பிக்கும் முறை குறித்தும், விளையாட்டு பொருட்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடிக்கு வந்திருந்த குழந்தைகளுடன் அமர்ந்து, கலந்துரையாடினார்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து, அதின் தரத்தினை ஆய்வு செய்தார். உணவினை சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டு தரத்தினை ஆய்வு செய்தார்.
கர்ப்பிணிகளுக்கு அறிவுரை
பின்னர் கலெக்டர் ஸ்ரேயாசிங் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கர்ப்பிணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பரிசோதனைக்கு வந்திருந்த கர்ப்பிணிகளிடம், கர்ப்ப காலத்தில் நல்ல மனநிலையை பேணுவதோடு, டாக்டர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு, சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கிராமப்புற செவிலியர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைந்தால் உடனடியாக அவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதோடு, கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story