குமரியை சுற்றுலா மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்;மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
குமரியை சுற்றுலா மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரியை சுற்றுலா மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து கூட்டம்
குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, பரமேஸ்வரன், அம்பிளி, செலின் மேரி, லூயிஸ், ராஜேஷ் பாபு, சோபி, சர்மிளா ஏஞ்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் சுகாதாரத் துறை, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் கூறியதாவது:-
கூடுதல் டாக்டர்கள்
கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மினி பஸ்கள் தடம்மாறி இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தடம்மாறி இயக்கப்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஞ்சிறை பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீர்மானங்கள்
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு இல்லை. டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இருந்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடம்மாறி செல்லும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு வினியோகம் செய்யும் ஓட்டல்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும், இயற்கை எழில் நிறைந்த குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சிப்பாறையில் அமைந்திருக்கும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக தரம் உயர்த்த வேண்டும், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும், குமரி மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஐ.டி. போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாநில அரசு சார்பில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story