ஆசிரியையின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது
செம்பனார்கோவிலில் குடும்பம் நடத்த வரமறுத்த ஆசிரியையின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
பொறையாறு:
செம்பனார்கோவிலில் குடும்பம் நடத்த வரமறுத்த ஆசிரியையின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
குடும்ப பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்த விக்டர் வினோத்குமார் (வயது 35). இவரது மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட் (37). இந்த தம்பதியினருக்கு கேப்ரியல் பிரின்ஸ் (9) என்ற மகனும், பெர்னிக்கா சஜன் (6) என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 6 மாத காலமாக கணவரை பிரிந்து ஹேமா ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தனது தந்தை அய்யாபிள்ளை என்பவர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ஹேமா ஜூலியட், சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
பிளேடால் ஆசிரியையின் கழுத்து அறுப்பு
நேற்று மாலை பள்ளியில் பணியை முடித்துவிட்டு ஹேமா ஜூலியட், கீழப்பாதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சங்கரன்பந்தலில் இருந்து பஸ்சில் செம்பனார்கோவில் கடைவீதிக்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது எனவும் கூறி தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.
அதற்கு அவர் மறுக்கவே விக்டர் வினோத்குமார், ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள செம்பனார்கோவில் கடைவீதியில், தனது மனைவி ஹேமா ஜூலியட்டின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார்.
கணவர் கைது
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்டர் வினோத்குமாரை கைது செய்தனர். கூட்டம் அதிகமுள்ள கடைவீதியில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story