மணல் அள்ளுவதற்கு அனுமதிக்க சி.ஐ.டி.யூ. கோரிக்கை
மணல் அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் மாவட்ட செயலாளர் சிவாஜி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாவட்டத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி பிழைக்கக்கூடிய தொழிலாளிகள் குடும்பங்கள் சுமார் ஆயிரம் பேர் வரை உள்ளனர். குறிப்பாக பரமக்குடியில் பொன்னையாபுரம், கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. வைகையில் தடுப்பணை கட்டுவதை ஒட்டி மாட்டு வண்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இந்த குடும்பங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சி.ஐ.டி.யூ. சார்பில் மாநிலம் முழுவதும் மாட்டுவண்டி தொழிலாளர்களை திரட்டி அரசுக்கு கோரிக்கை வைத்ததன் விளைவாக திருச்சி, தஞ்சை, கரூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அரசே குவாரி அமைத்து கொடுத்துள்ளது. இதனை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்டத்திலும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குவாரிகளை அரசு உருவாக்கி தர வேண்டும். இதன்படி பரமக்குடி, சனவெளி, ஓரியூர், மலட்டாறு இன்னும் பிற பகுதிகளில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு குவாரி அமைத்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதால் மணல் கொள்ளையும், மணல் திருட்டும் தடுக்கப்படுகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கிறது. நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story