புன்னம் சத்திரம் பகுதியில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை
புன்னம் சத்திரம் பிரிவு சாலை பகுதியில் ரவுண்டானா அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் புகழூர் காகித ஆலை மற்றும் வேலாயுதம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்தநிலையில் கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், ஈரோடு, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழூரில் உள்ள காகித ஆலைக்கு பல்வேறு வகையான மூலப்பொருட்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு இந்த பிரிவு சாலை வழியாக நாள்தோறும் கொண்டு செல்கின்றனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த வழியாக ஏராளமானோர் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களும், பள்ளி, கல்லூரி பஸ்களும் சென்று வருகின்றன.
இதேபோல் புகழூர் காகித ஆலையில் தயாரிக்கப்படும் செய்தித்தாள் காகித ரோல்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த வழியாக செல்கின்றன. அதேபோல் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்களும் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த சந்திப்பு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே புன்னம் சத்திரத்தில் உள்ள இந்த சந்திப்பு சாலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரவுண்டானா அமைத்து விபத்தை தடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story