சமுதாய கூடத்தில் பாடம் கற்பிப்பு; தோட்டக்குறிச்சியில் மீண்டும் பள்ளி கட்ட கோரிக்கை
தோட்டக்குறிச்சியில் மீண்டும் பள்ளிக்கூடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக கடந்த 1962-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. இந்த பள்ளியை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொத்தம் 65 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் வகுப்பறைக்குள் ஆங்காங்கே கட்டிட கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வந்தன. அதேபோல் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் ஆங்காங்கே உடைந்து உள்ளன. மழை பெய்யும்போது வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மாணவ-மாணவிகள் நனைந்துகொண்டு வகுப்பறையின் ஓரமாக நின்று பாடம் படித்து வந்தனர். இதேபோல் மேற்கூரையில் இருந்த மரச்சட்டங்களும் கரையான் அரித்து உடைந்து வகுப்பறைக்குள் விழும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்துடன் இருந்தனர். இது குறித்த ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து பழுதடைந்த பள்ளி கட்டிடம் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் வகுப்பறையில் பயின்று வந்த 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான 65 மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், தோட்டக்குறிச்சியில் உள்ள 2 சமுதாயக் கூடத்தில் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.
இந்தநிலையில் உள்ளூர் பகுதியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சுப நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் இந்த சமுதாயக்கூடத்தில் நடத்தி வந்தனர். இதனால் பேரூராட்சிக்கு வருமானமும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே சமுதாயக்கூடத்தில் பள்ளிக்கூடம் செயல்படுவதால் ஏழை குடும்பத்தினர் தங்களுடைய விஷேசங்களை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story