நெல்லை அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை
நெல்லை அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
களக்காடு:
நெல்லை அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பிரபல ரவுடி
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவி மேட்டுத்தெருவை சேர்ந்தவன் நீராவி முருகன் (வயது 45).
பிரபல ரவுடியான இவன் சென்னையில் வசித்து வந்தான். மேலும், நீராவி முருகன் மீது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கொள்ளை வழக்கில் தலைமறைவு
திண்டுக்கல் மாவட்டம் பழனி போலீஸ் நிலைய பகுதியில் 40 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நீராவி முருகன் சேர்க்கப்பட்டு இருந்தான். இந்த வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவானான்.
இதையடுத்து நீராவி முருகனை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையில் சத்தியராஜ், ஷேக் முபாரக், காங்குமணி, சுகுந்தகுமார் ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
காரில் தப்பினான்
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் களக்காடு மங்கம்மாள் சாலை அருகே உள்ள பொத்தை பகுதியில் நீராவி முருகன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஒரு வேனில் நேற்று காலையில் அங்கு சென்றனர்.
நீராவி முருகனை போலீசார் நெருங்கிய சமயத்தில் அவன் தனது கையில் வைத்து இருந்த பெரிய வாளால் போலீசாரை வெட்டிவிட்டு தனது காரில் ஏறி தப்பிச் சென்றான்.
விரட்டி பிடித்த போலீசார்
உடனே போலீசாரும் தங்களின் வேனில் அவனை விரட்டிச் சென்றனர். சிறிது தூரத்தில் காரை முந்திச் சென்று லேசாக மோதி, மடக்கினர். இருந்தாலும் நீராவி முருகன் காரில் இருந்து கீேழ இறங்கி காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடினான்.
அவனை போலீசார் துரத்திச் சென்றனர். நீராவி முருகனை நெருங்கிய போது, அவன் மீண்டும் வாளால் போலீசாரை வெட்டினான். இதில் 4 போலீசார் பலத்த காயம் அடைந்தனர். சுகுந்தகுமார் லேசான காயம் அடைந்தார்.
சுட்டுக்கொலை
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா தற்காப்புக்காக தனது கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டார். இந்த என்கவுண்ட்டரில் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நீராவி முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பின்னர் அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை போன்ற 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் பெண்களிடம் அரிவாள் முனையில் வழிப்பறி செய்வதுடன் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது போன்ற வழக்குகளும் உள்ளன.
இந்த நிலையில் நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படையினர் நீராவி முருகனை தேடி வந்தனர். அவன் களக்காடு பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது, வாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றான். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், நீராவி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஐ.ஜி. விசாரணை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “தற்போது காயம் அடைந்த போலீசாரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் முழுமையாக தகவல் கிடைக்கவில்லை. மேலும், இந்த சம்பவம் நீதித்துறை விசாரணையில் இருப்பதால் இதுகுறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கக்கூடாது” என்றார்.
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு உதவி போலீஸ் கமிஷனர் பாலசந்திரன், கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜா ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பரபரப்பு
ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story