ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோலார் கூடுதல் கலெக்டர் சினேகா முதல் குற்றவாளியாக சேர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோலார் கூடுதல் கலெக்டர் சினேகா, முதல் குற்றவாளியாக சேர்த்து ஊழல் தடுப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
ரூ.2.80 லட்சம் லஞ்சம்
பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் என்பவர் கோலார் தாலுகா வேமகல் மற்றும் நரசாபுரா தொழிற்பேட்டை பகுதியில் 56 நில பரிமாற்றத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தார். இந்த நிலையில், கோலார் கூடுதல் கலெக்டர் சினேகா, துணை தாசில்தார் பிரபாகரன் உள்ளிட்டோா் ஒரு விண்ணப்ப படிவத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதில், முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை மகேஷ் கொடுத்துள்ளார். அதன்பிறகு லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஷ், கடந்த 9-ந்தேதி ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்துள்ளார்.
முதல் குற்றவாளியாக சேர்ப்பு
இந்த நிைலயில் ஊழல் தடுப்பு படையினரின் அறிவுறுத்தலின்படி கடந்த 11-ந்தேதி மகேஷ், மீதமுள்ள பணத்தை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். அந்த பணத்தை அதிகாரிகள் வாங்கினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்பு படையினர், லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் பிரபாகரன், அதிகாரி ஜனார்த்தனகவுடா, ஒப்பந்த ஊழியர் மனோஜ்குமார் ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூடுதல் கலெக்டர் சினேகா தான் லஞ்சம் வாங்க கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கூடுதல் கலெக்டர் சினேகா மீது ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் முதல் குற்றவாளியாக கூடுதல் கலெக்டர் சினேகா சேர்க்கப்பட்டுள்ளார்.
விரைவில் கைது
இதுகுறித்து கூடுதல் கலெக்டர் சினேகா கூறுகையில், கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியவர்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த நிைலயில், ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ், கூடுதல் கலெக்டர் சினேகாவை சந்தித்தற்கான ஆதராங்களை ஊழல் தடுப்பு படையினர் சேகரித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந்தேதி மகேஷ், கூடுதல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர் கையெழுத்திட்ட பதிவேட்டை ஊழழல் தடுப்பு படையினர் பறிமுதல் ெசய்துள்ளனர். இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
Related Tags :
Next Story