சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த என்ஜினீயருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு


சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த என்ஜினீயருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 March 2022 8:20 PM GMT (Updated: 16 March 2022 8:20 PM GMT)

பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த என்ஜினீயருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மங்களூரு:

மங்களூரு விமான நிலையம்

  கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி இந்த விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே மிகமிக முக்கிய நபர்களின் கார்கள் வந்து நிற்கும் இடத்தில் மடிக்கணினி வைக்க பயன்படுத்தப்படும் ஒரு பை நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.

  இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

3 வெடிகுண்டுகள்

  வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்திற்கு வந்து அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த பையில் 3 வெடிகுண்டுகள் இருந்தன. பின்னர் வெடிகுண்டுகளை வைக்க பயன்படுத்தப்படும் வாகனம் வரவழைக்கப்பட்டு அதில் அந்த வெடிகுண்டு பை வைக்கப்பட்டது. பின்னர் அதை தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று, அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்.

  மேலும் இந்த சம்பவத்தால் விமான நிலையம் பதற்றத்துடன் காணப்பட்டது. அன்றைய தினம் மங்களூருவுக்கு வரவிருந்த விமானங்கள் மைசூரு, பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. பின்னர் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மர்ம நபர் ஒருவர் அந்த பையை ஆட்டோவில் கொண்டு வந்து விமான நிலையத்திற்குள் வைத்துச் சென்றது தெரியவந்தது.

கைது

  இதையடுத்து இச்சம்பவம் குறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் குறித்து விசாரித்து அவரை வலைவீசி தேடிவந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரான ஆதித்யா ராவ்(வயது 35) என்பவர் பெங்களூரு டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்து போலீசாரிடம் சரண் அடைந்தார். அவர் சாதாரணமாக அங்கு வந்து அங்கிருந்த போலீசாரிடம் நான்தான் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  அப்போது அங்கிருந்த போலீசார் செய்வதறியாது திகைத்து பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆதித்யா ராவை கைது செய்தனர். மேலும் அவரிம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே பெங்களூரு விமான நிலையம் மற்றும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் வெளிவந்ததும் விடுதலையாகி இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இதுபோன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டால் நான் பிரபலம் அடைவேன், அதனால்தான் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறி ஆதித்யா ராவ் போலீசாரை வியக்க வைத்தார். விசாரணைக்கு பிறகு அவர் மங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

20 ஆண்டு கடுங்காவல் சிறை

  அதையடுத்து அவரைப்பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அவர் மீதான விசாரணையை முடித்து மங்களூரு 4-வது கூடுதல் செசன்சு மற்றும் விரைவு கோர்ட்டில் பஜ்பே போலீசார் 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பல்லவி முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பல்லவி இவ்வழக்கில் தீர்ப்பு கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆதித்யா ராவை போலீசார் ஆஜர்படுத்தினர்.

  அப்போது இந்த வழக்கில் குற்றவாளியான ஆதித்யா ராவுக்கு வெடிகுண்டுகளை கையாண்ட குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி பல்லவி உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதையடுத்து ஆதித்யா ராவை போலீசார் மீண்டும் மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story