ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் பஞ்சமுக தேரோட்டம் கோலாகலம்
நஞ்சன்கூடுவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் பஞ்சமுக தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மைசூரு:
ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில்
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். கோவில் திருவிழாவையொட்டி பஞ்சமுக தேேராட்டம் நடப்பது வழக்கம். அதாவது ஸ்ரீகண்டேஸ்வரர் வீற்றிருக்கும் பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க அதன்பின்னால் பார்வதி, விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வர் சாமிகள் வீற்றிருக்கும் தேர்கள் வலம் வரும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்கவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு(2022) 17-ந்தேதி(நேற்று) ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக தேரோட்டம் நடப்பதாக கோவில் நிர்வாக தெரிவித்து இருந்தது.
தேரோட்டம் கோலாகலம்
அதன்படி நேற்று அதிகாலை மகர லக்கனத்தில் 3½ மணி முதல் 4½ மணி வரையிலான நேரத்தில் தேருக்குள் ஸ்ரீகண்டேஷ்வரர் சாமியை வைத்து சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் செய்தனர். இதற்கு முன்பு நள்ளிரவு முதல் ஸ்ரீகண்டேஸ்வார் சாமி சிலைக்கு விசேஷ அபிஷேகங்கள், அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து காலை 6 மணி முதல் ஸ்ரீகண்டேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது.
மைசூரு இளவரசர் யதுவீர்-குடும்பத்தினர், நஞ்சன்கூடு எம்.எல்.ஏ ஹர்ஷவர்தன், கலெக்டர் பகாவதி கவுதம், கோவில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து 80 அடி உயரம், 110 டன் எடை கொண்ட ஸ்ரீகண்டேஸ்வரர் வீற்றிருக்கும் பெரிய தேரை இருபுறமும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைபின்தொடர்ந்து பார்வதி தேவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்த தேர்கள் அணிவகுத்து சென்றது. இந்த பஞ்சமுக தேர்கள் நஞ்சன்கூடுவில் முக்கிய வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள்...
இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதாவது பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் எல்லாம் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், ஓம் நமச்சிவாயா... என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் வாழைபழத்தில் தங்களது வேண்டுதலை எழுதி தேர் மீது வீசினர்.
தேர்திருவிழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story