காட்டுபன்றி, லாரி மீது கார் மோதல்; பெண் உள்பட 3 பேர் சாவு


காட்டுபன்றி, லாரி மீது கார் மோதல்; பெண் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 17 March 2022 2:07 AM IST (Updated: 17 March 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

இரியூர் அருகே காட்டுபன்றி மீது மோதிய கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். கோவில் திருவிழாவுக்கு சென்றபோது பரிதாபம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு:

நின்ற லாரி மீது கார் மோதல்

  பெங்களூருவில் இருந்து தாவணகெரே நோக்கி சித்ரதுர்கா வழியாக நேற்றுமுன்தினம் இரவு கார் ஒன்று சென்றது. அந்த காரில் 6 பேர் பயணம் செய்தனர். இரியூர் தாலுகா ஐமங்களா அருகே சென்றபோது காரின் குறுக்கே திடீரென காட்டுப்பன்றி ஒன்று வந்தது. 

இதனால் கார், காட்டுப்பன்றி மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

3 பேர் சாவு

  இடிபாடுகளில் சிக்கி காருக்குள் இருந்த 2 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், காரில் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஐமங்களா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவில் திருவிழாவுக்கு...

  அதில், விபத்தில் பலியானவர்கள் பெங்களூருவை சேர்ந்த விஜயகுமார்(வயது 38), ரவிக்குமார்(35) மற்றும் பெண் ஒருவர் என்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தாவணகெரேயில் நடக்கும் துர்கம்மா கோவில் திருவிழாவிற்கு காரில் வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. 

மேலும் கார் மோதி காட்டுப்பன்றியும் இறந்தது. இந்த விபத்து குறித்து ஐமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story