வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணி
வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
அகழாய்வு பணி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேட்டுக்காடு பகுதியில் பழங்கால பொருட்கள் கிடைத்தன. எனவே அங்கு தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அங்கு நேற்று அகழாய்வு பணிகள் தொடங்கின. அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த மாதம் 11-ந் தேதி காணொலி காட்சி அகழாய்வு பணியை தொடங்கி வைத்தார்.
பழங்கால பொருட்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மேட்டுக்காடு அல்லது உச்சிமேடு என அழைக்கப்படும் இடம் அகழ்வாராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த இடம் வைப்பாற்றின் இடது புறத்தில் அமைந்துள்ளது. தொல்லியல் பணி முக்கியமானதாகும். இதன் மூலம் கற்காலம் தொடங்கி மக்கள் வாழ்ந்த வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும்.
தொல்லியல் மேட்டில் மேற்பரப்பில் சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன கருவிகள், கற்களால் ஆன காதணிகள் உள்பட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் சுடுமண் கிணறு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்காட்சி
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொல்லியல் துறை புதிய உத்வேகத்துடன் செயல்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் கண்காட்சி அமைப்பது பற்றி முன்கூட்டியை முடிவு செய்யப்படவில்லை.
இருப்பினும் அகழ்வாராய்ச்சியில் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் பொருட்கள் மற்றும் உண்மையான நிலைமை தெரிந்து கொள்ள முடியும். அதற்காக சுமார் 25 ஏக்கர் அகழ்வாராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வெம்பக்கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமாகும். ஏனெனில் விஜயகரிசல்குளத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சான்று
முற்காலப்பாண்டியர்கள், ராஜராஜ சோழன் கால கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சோழர் கால ஆட்சி பற்றிய வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் பற்றி அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், தொல்லியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர் செய்திருந்தார். முடிவில் இணை இயக்குனர் பரத்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story