வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
மேச்சேரியில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.
மேச்சேரி:-
மேச்சேரி இந்திரா நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் அந்த பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஹேமஹரிணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பொமேரியன் வகையை சேர்ந்த ஹைடி என்ற ஆண் நாயையும், சாரா என்ற பெண் நாயையும் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்தனர். இதில் 9 மாத சாரா கர்ப்பம் தரித்தது. இதையடுத்து வீட்டில் கர்ப்பிணிகளுக்கு நடத்துவது போலவே பெண் நாய் சாராவிற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது. இதற்காக பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நாய் சாராவுக்கு, நாற்காலியில் அமர வைத்து மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் அணிவித்து பெண்கள் மகிழ்ந்தனர். பின்னர் நடந்த விருந்தில் 5 வகை உணவுகள் பரிமாறப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அடங்கிய சீர்வரிசையை நடராஜன் குடும்பத்தினர் வழங்கினர். இந்த வளைகாப்பு வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story